ஏற்காடு வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 2 பேர் சிக்கினர்

ஏற்காடு மலைப்பகுதியில் மான் வேட்டையாடிய 2 பேரிடம் வன அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-07-25 22:15 GMT
கன்னங்குறிச்சி,

ஏற்காடு மலைப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள மான்களை சில மர்ம ஆசாமிகள் அவ்வப்போது வேட்டையாடி வருகின்றனர். இவர்களை பிடிக்க வன அலுவலர்கள் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கன்னங்குறிச்சி போலீசார் நேற்று ஏற்காடு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அப்போது சாலையில் போலீசார் நிற்பதை கண்ட அவர்கள் மோட்டார் சைக்கிளை வந்த பாதையில் திருப்பிக்கொண்டு வேகமாக ஓட்டி சென்றனர். அவர்களை போலீசார் துரத்தி பிடித்தனர். பின்னர் 2 பேரிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் அய்யந்திருமாளிகை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் லோகநாதன்(25), சின்னப்பையன் மகன் லட்சுமணன்(30) என்பது தெரிந்தது.

தொடர்ந்து அவர்கள் வைத்து இருந்த ஒரு மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் 20 கிலோ மான்கறி இருப்பது தெரிந்தது. அது ஏற்காடு வனப்பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா பகுதியில் ஒரு மானை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதையொட்டி 2 பேரையும் போலீசார் வன அலுவலர் பெரியசாமியிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் வன அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்