அதிவேகமாக பஸ்களை ஓட்டினால் அபராதம் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

அதிவேகமாக பஸ்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-07-26 00:26 GMT
புதுச்சேரி,

புதுவையும் போக்குவரத்து நெரிசலும் பிரிக்க முடியாததாக இருந்து வருகிறது. இதை சமாளிக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் கடலூர் சாலை போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

தனியார் மூலம் 250-க்கும் மேல் நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 2-ந் தேதி பாரதி மில் அருகே தனியார் பஸ் மோதியதில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பிளஸ்-1 மாணவி திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நடந்த சுவடு மறைவதற்குள் ரோடியர் மில் அருகே முதலியார்பேட்டை ரெயில்வே கேட் பகுதியில் நின்று இருந்த வாகனங்கள் மீது தனியார் பஸ் ஒன்று தாறுமாறாக ஓடி மோதி தள்ளியது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு காரும் சேதம் அடைந்தன.

இதற்கு தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்வதும், சாலை விதிகளை சரியாக கடைபிடிக்காததும் தான் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து சாலை விபத்துகளை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை போக்குவரத்து போலீசார், பஸ் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் போக்குவரத்து போலீஸ்நிலையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பஸ் டிரைவர்கள் கண்டிப்பாக சாலை விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும். அதிவேகமாக பஸ்களை ஓட்டக்கூடாது. முதலியார்பேட்டை ரெயில்வே கேட்டில் இருந்து முருங்கப்பாக்கம் வரை பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாகத்தான் செல்ல வேண்டும். முன்னால் செல்லும் வாகனங்களை முந்தி செல்லக்கூடாது. பஸ் நிறுத்தத்தில் மட்டுமே பஸ்களை நிறுத்த வேண்டும். பயணிகளை இறக்கி, ஏற்றிய உடன் அங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டும். பயணிகள் வருவார்கள் என பஸ் நிறுத்தத்தில் காத்து நிற்கக்கூடாது. அனுமதி இல்லாமல் பஸ்கள் ஓடினால், அதன் உரிமம் ரத்து செய்யப்படும்.

லைசென்சு (ஓட்டுனர் உரிமம்) இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அந்த பஸ்சின் உரிமத்தையும் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். டிரைவர் சீருடை இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். பஸ்நிறுத்தம் இல்லாமல் வேறு இடத்தில் பஸ்சை நிறுத்தினால் ரூ.500, வேகமாக பஸ்சை ஓட்டினால் ரூ.400, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் ரூ.1000 என அபராதம் விதிக்கப்படும்.

நாளை (இன்று வெள்ளிக் கிழமை) முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். எனவே பஸ் டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்துகள் இன்றி வாகனங்களை ஓட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜசேகர வல்லாட், சுப்பிரமணி, டெல்லி போக்குவரத்து பயிற்சி பள்ளி நிறுவன தலைவர் பங்கஜ் மேக்சா, இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், வரதராஜன், தனசேகர் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள் கலந்துகொண்டனர்.

அவர்கள் கூறும்போது, புதுவை-கடலூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. இதனால் வாகனங்களை ஓட்ட சிரமமாக உள்ளது. வாகனங்களை சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்