ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

Update: 2019-07-30 22:30 GMT
ஊட்டி,

ஆண்டுதோறும் ஜூலை மாதம் 29-ந் தேதி உலக புலிகள் தினமாக கிடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி புலிகளை பாதுகாப்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். வனவிலங்கியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் பேசும்போது:-

கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 264 புலிகள் உள்ளன. புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மலையில் 981 புலிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. யானைகள் வழித்தடத்தை போல் புலிகள் வழித்தடத்தை பாதுகாத்து முறைப்படுத்த வேண்டும். புலிகளை பாதுகாக்கப்பட்டால், அவற்றிற்கு உணவாகும் மான், காட்டெருமை போன்ற தாவர உண்ணிகள் பாதுகாக்கப்படும்.

ஒவ்வொரு புலியும் தனது எல்லையை வரையறுத்து கொள்கிறது. புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவற்றின் வாழ்விடங்கள் அதிகளவில் தேவைப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் புலி கிராமத்துக்குள் நுழைவதால் மனித-விலங்கு மோதல் ஏற்படுகிறது. மேலும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. சர்வதேச புலிகள் தினத்தில் புலிகள் மற்றும் அதன் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சிறந்த புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பந்தலூர், கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் புலிகள் வாழ்ந்து வருகின்றன. அப்பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்து படித்து செல்கின்றனர். அவர்களுக்கு புலிகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், அதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே கருத்தரங்கின் நோக்கம் ஆகும். ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் புலி போன்ற வனவிலங்குகளின் டி.என்.ஏ. ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் பேசினார். இதில் வனவிலங்கியல் மற்றும் உயிரியல் துறை தலைவர் எபனேசர், உதவி பேராசிரியர்கள் மோகனகிருஷ்ணன், கண்ணன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்