ஊதியம் வழங்காத சர்க்கரை ஆலையை கண்டித்து தொழிலாளர்கள் 2-வது நாளாக கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம்

ஊதியம் வழங்காத தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து தொழிலாளர்கள் 2-வது நாளாக கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2019-07-30 22:30 GMT
பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த இறையூரில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 12 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதை கண்டித்து தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் இறையூரில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கடந்த 12 மாதங்களாக ஊதியம் இல்லாமல் வாடும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் கஞ்சி காய்ச்சி குடித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இவர்களது போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதில் சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், தொழிலாளரின் நலனில் அரசு கவனம் செலுத்தி, அவர்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை பெற்றுத்தர வேண்டும், தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சார இணைப்பு வழங்குதல், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசினர்.

மேலும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கூடலூர் கிராம மக்கள் கலந்து கொண்டு கஞ்சி காய்ச்சி கொடுத்தனர். இதில் தொழிலாளர்கள் தங்களது மனைவி, குழந்தை என்று குடும்பத்துடன் கலந்து கொண்டு கஞ்சி குடித்தனர். இவர்களது கோரிக்கை நிறைவேறுகிற வரைக்கும் தினசரி ஒவ்வொரு கிராம மக்களின் சார்பில் தொழிலாளர்களுக்கு கஞ்சி காய்ச்சி கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். அதன்படி, இன்று(புதன்கிழமை) பொன்னேரி கிராம மக்கள் சார்பில் கஞ்சி காய்ச்சி கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்