ஓடும் காரில் மாரடைப்பால் டிரைவர் சாவு - விபத்து ஏற்பட்டு 2 குழந்தைகள் காயம்

பொங்கலூரில் ஓடும் காரில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் இறந்தார். மேலும் அவர் ஓட்டிச்சென்ற கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 2 குழந்தைகள் காயம் அடைந்தனர்.

Update: 2019-07-31 22:54 GMT
பொங்கலூர்,

ஓடும் காரில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் இறந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கரூர் மாவட்டம், அரிக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணகுமார் (வயது 30). டிரைவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு காரில் லட்சுமணகுமார், கரூரை சேர்ந்த 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் அவர்களது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் ஒருவரை பார்த்து விட்டு அனைவரும் அதே காரில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

காரை லட்சுமணகுமார் ஓட்டினார். கார் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே வந்தபோது லட்சுமணகுமாருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் காரை பொங்கலூரில் நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதித்துள்ளார். அப்போது டாக்டர் உடனடியாக அவரை பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியுள்ளார். உடனே அதே காரில் சிகிச்சைக்காக பல்லடம் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது கார் பொங்கலூர் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது திடீரென்று லட்சுமணகுமாருக்கு மாரடைப்பு வந்து மயக்கம் அடைந்தார். இதனால் கார் தாறுமாறாக ஓடி அங்கே வாடகை வேன்கள் நிறுத்தும் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வேன் மீது கார் மோதி நின்றது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது லட்சுமணகுமார் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் லட்சுமண குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இந்த விபத்து காரணமாக காரில் இருந்த குழந்தைகள் ரித்திக்(4) மற்றும் ஹட்சன் ராஜ் என்ற 8 மாத குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்