சேலத்தில் அரசு பொருட்காட்சி எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே அரசு பொருட்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

Update: 2019-08-02 22:30 GMT
சேலம்,

சேலத்தில் ஆடி மாதத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பழைய பஸ் நிலையம் அருகே போஸ் மைதானத்தில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் மாநகராட்சி சார்பில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையத்தை முழுவதுமாக இடித்துவிட்டு நவீன ஈரடுக்கு பஸ் நிலையமாக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் போஸ் மைதானம் தற்காலிக பஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் புதிய பஸ்நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இதனால் அங்கு அரங்குகள் மற்றும் ராட்டினங்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த அரசு பொருட்காட்சி தொடக்க விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்குகிறார். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். மேலும் அவர் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.விழாவில் கலெக்டர் ராமன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(சனிக் கிழமை) சேலம் வருகிறார். இதையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்