பெட்ரோல் திருடியதாக போலீசாரால் விசாரிக்கப்பட்ட வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்
பெட்ரோல் திருடியதாக போலீசாரால் விசாரிக்கப்பட்ட வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம், வருசநாடு பவளநகரை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (வயது 19). திருப்பூரில் பெற்றோருடன் வசித்து வந்த அவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் உறவினர் வீட்டின் விசேஷ நிகழ்ச்சிக்காக சத்தியமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு வருசநாடு வந்தார். நேற்று முன்தினம் வருசநாடு பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி என்பவர் தனது மோட்டார்சைக்கிளில் இருந்த பெட்ரோலை சத்தியமூர்த்தி திருடி விட்டதாக வருசநாடு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் சத்தியமூர்த்தியை போலீஸ் நிலையத்தில் வைத்து சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டி மற்றும் போலீசார் விசாரித்தனர். அதன் பின்னர் சத்தியமூர்த்தியை அவரது உறவினர்கள் வந்து வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை சத்தியமூர்த்தி தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து சத்தியமூர்த்தியின் உறவினர் செல்லத்துரை வருசநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதையொட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து சத்தியமூர்த்தியின் உடலை கைப்பற்றி க.விலக்கில் உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சத்தியமூர்த்தியின் உறவினர்கள் திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் சத்தியமூர்த்தியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணையின் போது போலீசார் சத்தியமூர்த்திக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு தேனி-மதுரை சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து சத்தியமூர்த்தியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து உறவினர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மதுரை-தேனி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.