ஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - 30-ந் தேதி கடைசி நாள்

ஜெருசலேம் புனித பயணத்துக்கு நீலகிரி மாவட்ட கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கு 30-ந் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

Update: 2019-08-02 22:45 GMT
ஊட்டி,

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ெஜருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்து அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது. இதில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் அடங்குவர்.

இந்த புனித பயணம் இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதம் தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. பயணம் வருகிற அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரைக்குள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்ப படிவம் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து கட்டணமின்றி பெறலாம்.

இதுதவிர www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20’ என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்