தாறுமாறாக ஓடி கார் கவிழ்ந்ததில் தொழில் அதிபர் உடல் நசுங்கி பலி - மனைவி உள்பட 4 பேர் காயம்

சிறுமிகள் வைத்திருந்த பலூன் வெடித்ததில் காரை ஓட்டிய தொழில்அதிபர் அதிர்ச்சியடைந்தார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்ததில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.;

Update:2019-08-03 04:30 IST
போடி,

போடி அருகே உள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). ரெடிமேடு ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழில்அதிபரான இவர், மனைவி லதா, மகள்கள் தான்யாஸ்ரீ (7), ஆதன்யா (3), உறவினர் ராமகிருஷ்ணன், அவரது மனைவி மாலதி ஆகியோருடன் காரில் தேனியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் ஆடித்தள்ளுபடிக்கு ஜவுளி எடுக்க சென்றார்.

பின்னர் அவர்கள் காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். காரை மணிகண்டன் ஓட்டினார்.

ஜவுளிக்கடையில் பரிசு பொருட்களாக பலூன், பொம்மைகள் கொடுத்துள்ளனர். அதனை சிறுமிகள் வைத்து விளையாடியபடி வந்துள்ளனர். போடி அணைக்கரைப்பட்டி விலக்கு அருகே கார் வந்தபோது சிறுமிகள் வைத்திருந்த பலூன் திடீரென வெடித்தது. பலூன் வெடித்த சத்தத்தில் மணிகண்டன் அதிர்ச்சியடைந்தார். இதில் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மணிகண்டன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். காரில் உடன் வந்த அவரது மனைவி லதா, மகள் தான்யாஸ்ரீ, ராமகிருஷ்ணன், மாலதி ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் தான்யாஸ்ரீ மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்