பஸ்சில் இடம் பிடிப்பதில் தகராறு: இரட்டையர்கள் மீது தாக்குதல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

பஸ்சில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரட்டையர்களை தாக்கியதாக கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-04 22:15 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாதிரிமேடு காலனி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன்கள் இளமாறன், இளம்பரிதி. இரட்டையர்களான இவர்கள் இருவரும் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்கள்.

சுவாமிமலை அருகே உள்ள நாகக்குடி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுரேந்திரநாத் (வயது18), கருப்பசாமி மகன் பிரகாஷ் (18) ஆகிய 2 பேரும் கும்பகோணத்தில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். இளமாறன், இளம்பரிதி, சுரேந்திரநாத், பிரகாஷ் ஆகிய 4 பேரும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதற்காக கும்பகோணத்துக்கு தினமும் ஒரே பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

சம்பவத்தன்று கும்பகோணத்தில் இருந்து ஊருக்கு வருவதற்காக இளமாறன், இளம்பரிதி ஆகிய 2 பேரும் பஸ் ஏறி, இடம் பிடிக்க முயன்றனர். அப்போது சுரேந்திரநாத், பிரகாஷ் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பஸ் நாககுடிக்கு வந்ததும் சுரேந்திரநாத்தும், பிரகாசும் சேர்ந்து இளமாறன் மற்றும் இளம்பரிதியை தாக்கி உள்ளனர். இதுகுறித்து இளமாறன், இளம்பரிதி ஆகியோரின் அண்ணன் இளவழகன் (25) சுவாமிமலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவல்லி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்திரநாத், பிரகாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்