கலெக்டர் அலுவலகம் முன்பு, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மக்கள் மனுக்கள் அளித்தனர். மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மனு அளிப்பதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சிலர் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. இதனால், விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 1995-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் 3½ லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
எனவே, கடன் தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை சட்டம்-2018 மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத சட்டம் 2016 ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கண்டமனூர் அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எம்.சுப்புலாபுரத்தின் தென் கிழக்கு பகுதியில் ஒரு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. பாதைக்கு வழியின்றி வாய்க்கால் கரையோர அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
பா.ஜ.க. தேனி மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘தேனி பெரியகுளம் சாலையில் கிழக்கு சந்தை நுழைவு வாயிலில் இருந்து வரும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் தவறான திசையில் பயணிப்பதால் பெரும் அளவில் விபத்து மற்றும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பு சுவரை அகற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த ராமு என்பவர் தனது குடும்பத்துடன் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார்.
அந்த மனுவில், ‘நான் எலக்ட்ரிக்கல் கடை வைத்து இருந்தேன். அதை ஒட்டியே எனது வீடும் இருந்தது. கடந்த 30-ந்தேதி எனது கடை, வீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களும், வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் நாசமாகி விட்டன. எனவே வாழ வழியின்றி தவிக்கும் எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
அதேபோல், ராமு கடைக்கு அருகில் ஊஞ்சாம்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவர் வைத்திருந்த வாகன பழுதுபார்ப்பு நிலையமும் எரிந்து நாசமானது. இதையடுத்து ஜெகதீஸ்வரனும் தனது குடும்பத்துடன், நிவாரணம் கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.