தேனியில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த, தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

தேனியில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-08-06 22:30 GMT
தேனி,

தேனி நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகம் இருப்பதால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். அதன்பேரில், தேனி கடற்கரை நாடார் தெருவில் உள்ள கடைகள், குடோன்களில் தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், மாரிமுத்து, பாலமுருகன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ராஜாராம் என்பவருக்கு சொந்தமான 2 குடோன்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பிளாஸ்டிக் பை, தம்ளர், பிளாஸ்டிக் தாள் என மொத்தம் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பதுக்கி வைத்தது தொடர்பாக குடோன்களின் உரிமையாளர் ராஜாராமுக்கு ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்று யாரேனும் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்தாலோ, பயன்படுத்தினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்