நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை நீக்கம்

நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆறுறில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

Update: 2019-08-06 23:00 GMT
பென்னாகரம்,

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படும். இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவிகளில் தண்ணீர் கொட்டுவது குறைந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடகம்-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் காவிரி கரையோரத்தில் குளித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்று மகிழ்ந்தனர். 14 நாட்களுக்கு பிறகு காவிரி ஆற்றில் பரிசல் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்