காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - 23 பேர் கைது

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-06 22:30 GMT
சேலம்,

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையொட்டி அந்த மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதேபோன்று தமிழகத்தில் பல்வேறு எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை கண்டித்து சேலம் வடக்கு மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

ஆனால் தடையை மீறி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாநகர தலைவர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கதிர்வேல், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதையொட்டி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி சேலம் கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் காவலில் வைத்தனர். 

மேலும் செய்திகள்