சேலத்தில் கோவில் விழாவில் மோதல், 2 வாலிபர்களின் கழுத்தை பிளேடால் அறுத்த கும்பல் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

சேலத்தில் கோவில் விழாவில் நடந்த மோதலில் 2 வாலிபர்களின் கழுத்தை ஒரு கும்பல் பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் படுகாயம் அடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2019-08-07 22:30 GMT
சேலம்,

சேலம் குகை காளியம்மன், மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதனால் சேலம் மாநகரில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

அப்போது, முன்புறமாக நின்று கலை நிகழ்ச்சிகளை பார்த்தவர்களை ஒதுங்கி நிற்குமாறு சிலர் கூறினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதில், குகை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 20) என்பவரின் கழுத்து மற்றும் தொடை பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் பிளேடால் அறுத்தது. இதனால் அவருக்கு உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டதால் அலறி துடித்தார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதேபோல், அந்த பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (17) என்பவரும் நேற்று முன்தினம் இரவு செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மடக்கி பிடித்து பிளேடால் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவத்திலும் கோவில் திருவிழாவில் நடந்த மோதலையொட்டி அந்த மர்ம கும்பல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஸ்வரனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்