ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மூடப்பட்டது ; நூலகமாக மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை

5-க்கும் குறைவான மாணவர்கள் இருந்ததால் ஏ.கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மூடி, அதை நூலகமாக மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2019-08-08 22:45 GMT
பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஏ.கொல்லப்பட்டி கிராமத்தில் கடந்த 1990-ம் ஆண்டு கிராம மக்களின் முயற்சியால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் ஏ.கொல்லப்பட்டி, சஜ்ஜலப்பள்ளி, அச்சமங்கலம், சீமானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 120 மாணவ, மாணவிகள் கல்வி படித்து வந்தனர்.

காலப்போக்கில் சுற்றுவட்டாரங்களில் தனியார் பள்ளிகள் அதிகரித்தும், அப்பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வர வாகனம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தியதால், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்தது. கடந்த கல்வியாண்டில் 10-க்கும் குறைவான மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளி ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் வீடு, வீடாக சென்று அரசின் திட்டங்களை கூறியும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க முன்வரவில்லை.

பள்ளி சார்பில் இலவசமாக ஆட்டோ இயக்கப்படும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை 5-க்கும் கீழாக குறைந்ததால், இப்பள்ளி கடந்த சில தினங்களுக்கு முன்பு மூடப்பட்டது. தற்போது நூலகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நூலகத்திற்கு நாள்தோறும் 20-க்கும் மேற்பட்டவர்கள் வந்து புத்தகங்களை வாசித்து செல்கின்றனர். இப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் வேறு அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் கேட்ட போது கூறியதாவது:-

தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கை மற்றும் மாணவர்கள் இல்லாத அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு, அங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏ.கொல்லப்பட்டி, ஊத்தங்கரை ஒன்றியம் கதிரம்பட்டி, வேப்பனப்பள்ளி ஒன்றியம் எப்ரி கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிக்கட்டிடங்கள் நூலகத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நூலகத்துறை அலுவலர்கள் சிலரிடம் கேட்ட போது, மூடப்பட்டுள்ள 3 அரசுப்பள்ளிகளும் 500 புத்தங்களை கொண்டு நூலக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நூலகம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். தற்போது, தினக்கூலி அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்