பந்தலூர் பகுதியில் பலத்தமழை, சாலையின் நடுவில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு

பந்தலூர் பகுதியில் பெய்த மழை காரணமாக சாலையின் நடுவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது.

Update: 2019-08-08 22:45 GMT
பந்தலூர், 

பந்தலூர் தாலுகா பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. பாலாப்பள்ளி, கறிக்குற்றி, சேரங்கோடு பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நூற்றுக்கணக்கான பொதுமக்களை மீட்டனர். தொடர்ந்து அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைத்தனர். இதேபோல் சேரங்கோடு பஜார், போலீஸ் நிலையம், கால்நடை மருத்துவமனை, சோலாடி ஆகிய பகுதியில் மரங்கள், மண் சரிந்து விழுந்தது.

இதனை கூடலூர் உதவி கோட்ட பொறியாளர் நசீமா, உதவி பொறியாளர் இளவரசன் உள்ளிட்ட நெடுஞ் சாலைத்துறையினர், போலீசார் இணைந்து பொதுமக்கள் உதவியுடன் பொக்லின் எந்திரம் மூலம் மரம் மற்றும் மண்சரிவை அகற்றினர்.

பலத்த மழை நீடிப்பதால் மண் சரிவு அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் அடிக்கடி ஏற்படுகிறது. இதனிடையே பந்தலூரில் இருந்து எலியாஸ் கடை பிரிவு வழியாக கொளப்பள்ளிக்கு செல்லும் சாலையில் முனீஸ்வரன் கோவில் அருகே சாலையின் நடுவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் நேரில் ஆய்வு நடத்தினர். அப்போது மழையும் நீடிப்பதால் சீரமைப்பு பணியை தொடங்க முடியாமல் உள்ளதாக அதிகாரிகள் கூறினர். எனவே 2 நாட்களுக்கு அப்பகுதி வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

மேலும் செய்திகள்