அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில்,நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிப்போர் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.;

Update:2019-08-11 03:30 IST
தேனி,

இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


தேனி மாவட்டத்தில் உள்ள தேனி அல்லிநகரம், போடி, சின்னமனூர், பெரியகுளம், கம்பம் மற்றும் கூடலூர் ஆகிய 6 நகராட்சி பகுதிகள் மற்றும் 22 பேரூராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இதற்காக நகராட்சி, பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டிட தகுதியான நபர்களுக்கு வேறு எங்கும் கான்கிரீட் வீடுகள் இருக்கக் கூடாது. வீடு கட்டுவதற்கான இடத்தின் நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட பத்திரம் அல்லது பட்டா வைத்திருக்க வேண்டும். பயனாளியின் மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

வீடு கட்டிக்கொள்ள மானியமாக கட்டிட அடித்தளம் நிறைவு பெற்றபின் ரூ.50 ஆயிரம், கட்டிட சுவர் எழுப்பப்பட்ட பின்பு ரூ.50 ஆயிரம், கட்டிட கான்கிரீட் தளம் நிறைவுபெற்றபின் ரூ.50 ஆயிரம், கட்டிடத்தின் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்றபின் ரூ.60 ஆயிரம் என 4 தவணைகளில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

புதிதாக கட்டப்படவுள்ள குடியிருப்பின் பரப்பளவு குறைந்தது 300 சதுரடியில் இருந்து 500 சதுரடி வரை இருக்க வேண்டும். ஒவ்வொரு குடியிருப்பிலும் தனித்தனியாக வசிப்பறை, படுக்கையறை, சமையலறை மற்றும் குளியலறை அமைக்கப்பட வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம். இத்திட்டத்தில் வீடுகட்ட விருப்பம் உள்ளவர்கள் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். வீடு கட்ட விருப்பம் உள்ள விவசாயிகள் பேரூராட்சி, நகராட்சி அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்