சேலத்தில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி - ஓசூர் பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு

சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக ஓசூரை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-08-11 22:45 GMT
சேலம்,

சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர், சேலத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், பள்ளப்பட்டி போலீசில் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதற்காக சேலம், வாழப்பாடி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 54 பேரை தேர்வு செய்தேன். அதற்கான ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாங்கி, அதை எனக்கு தெரிந்தவர்களான 2 பெண்கள் உள்பட 6 பேரிடம் கொடுத்தேன்.

இதற்காக பல்வேறு தவணை முறையில் ரூ.57 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தேன். ஆனால் அவர்கள், நான் தேர்வு செய்து கொடுத்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தராமல் காலதாமதம் செய்து வந்தனர். வெளிநாடு செல்வதற்கான விசாவும் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள். இது குறித்து விசாரித்தபோது, 6 பேரும் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வாழப்பாடியை சேர்ந்த ரமேஷ், விஜயகுமார், ராஜூ, கார்த்திக்குமார் மற்றும் ஓசூரை சேர்ந்த சுஷ்மா, உஷா என மொத்தம் 6 பேர் சேர்ந்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ரமேஷ் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்