உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு அ.தி.மு.க.வினர் அயராது உழைக்க வேண்டும் - சதன்பிரபாகரன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்

நயினார்கோவிலில் அ.தி.மு.க. கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்று சதன் பிரபாகரன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2019-08-12 23:00 GMT
நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் அ.தி.மு.க. கலந்தாய்வு மற்றும் குறைகள் கேட்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் நவநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரஜினிகாந்த் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்து எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து சதன் பிரபாகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- வெற்றிக்கு உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிக்கு உழைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்கவேண்டும். கிராமம் கிராமமாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் சொல்லுங்கள். உடனடியாக சரி செய்து தருகிறேன்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த நிதியினை அனைத்து கிராமங்களுக்கும் பயன்தரும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவேன். வேலூரில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. தி.மு.க. மட்டுமே நமக்கு எதிரியாக கொண்டு இனிவரும் காலங்களில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் தொடர் வெற்றிகளை பெற முடியும். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை அவரது வழியில் தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் மேமங்கலம் துரைசிங்கம், வல்லம் துரைசிங்கம், அவை தலைவர் சுந்தர்ராஜன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் நல்லதம்பி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் கரிகாலன், ஒன்றிய மாணவரணி செயலாளர் சத்தியேந்திரன், ஊராட்சி செயலாளர்கள் வாணியவல்லம் நாகநாதன், பாண்டியூர் முத்துராமலிங்கம், நயினார்கோவில் கிளை செயலாளர் கருப்பையா, பரமக்குடி நகர் தகவல் தொழில்நுட்ப செயலாளர் கவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சோலை முருகன், ராஜ்குமார், பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்