யானைகளை பாதுகாக்க மாணவர்கள் உறுதிமொழி

சர்வதேச யானைகள் தினத்தையொட்டி யானைகளை பாதுகாக்க ராமேசுவரம் கோவில் யானை முன்பு பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Update: 2019-08-12 22:30 GMT
ராமேசுவரம்,

சமூக வாழ்க்கை முறை கொண்ட யானைகள், அதிக தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளும். இதனால் செழிப்பான காடுகளில் தான் யானைகள் வசிக்கும். காடுகள் செழிக்க, உயிர்ப்போடு இருக்க யானைகள் முக்கிய காரணியாக விளக்குகிறது.

ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி உலக யானைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

யானைகள் தினமான நேற்று வனத்தை பல்லுயிர் பெருக்கத்திற்கு வித்திட்டு, பாதைகள் அமைத்து, நீர்நிலைகள் உருவாக காரணமாக இருக்கும் யானைகளை பாதுகாக்க வலியுறுத்தி ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணியில் என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி., ரெட்கிராஸ் மாணவர்கள் கோவிலின் ரத வீதிகளை சுற்றி பேரணியாக கோவிலின் வடக்கு வாசல் வழியாக ராமேசுவரம் கோவில் யானை ராமலட்சுமி இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

அங்கு பள்ளி மாணவர்கள் யானைக்கு வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு துண்டுகளை கொடுத்து அழிந்து வரும் யானைகளை பாதுகாப்போம்,யானைகளை பாதுகாக்க அனைவரும் உறுதி ஏற்போம் என யானையின் முன்பு நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளியின் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஜெயகாந்தன், என்.சி.சி. ஆசிரியர் பழனிசாமி, ஆசிரியர் தினகரன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க செயலாளர் களஞ்சியம், கம்பன் கழக பொருளாளர் ராமச்சந்திரன், யானை பாகன் ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்