சின்னாளபட்டி அருகே, போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற விவசாயி மாயம்

சின்னாளபட்டி அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற விவசாயி மாயமானார். இதை கண்டித்து அவரது குடும்பத்தினர் அழுகிய மீன்களுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-12 22:30 GMT
சின்னாளபட்டி,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள அ.வெள்ளோடு கோம்பையில் வசித்து வருபவர் ராஜாங்கம். அவருடைய மகன் மார்க் யாகப்பன் (வயது 28). விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.வெள்ளோடு புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா நடத்துவதற்கான கூட்டம் நடந்தது.

அப்போது மார்க்யாகப்பன் தகராறு செய்ததாக ஊர் நிர்வாகிகள் அம்பாத்துரை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மார்க் யாகப்பன் மற்றும் அவருடைய சித்தப்பா பீட்டர் ஆகியோரை போலீசார் அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 9-ந்தேதி முதல் 3 நாட்கள் ஆலய திருவிழா நடந்தது.

இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி மார்க்யாகப்பன் ஆலய திருவிழாவையொட்டி 300 கிலோ மீனை வாங்கி வந்து அ.வெள்ளோடு சந்தியாகப்பர் சிலுவை திண்ணை அருகே வைத்து விற்பனை செய்தார். அப்போது அங்கு வந்த அம்பாத்துரை போலீசார், ஊர் நிர்வாகிகள் புகார் செய்துள்ளதாக கூறி அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. மார்க் யாகப்பன் விட்டுச் சென்ற மீன்களும் கடந்த 2 நாட்களாகவே அங்கேயே கிடந்ததால் துர்நாற்றம் வீசியது.

இதற்கிடையே மார்க் யாகப்பன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரின் மனைவி மெர்சி, தாய் மங்களம், தம்பி ஸ்டாலின் ஆகியோர் மார்க்யாகப்பன் மீன் விற்பனை செய்த இடத்தில் கிடந்த அழுகிய மீன்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மார்க்யாகப்பனை காணவில்லை என எழுதப்பட்ட பதாகையை கையில் ஏந்தியபடி அழுதபடி இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்பாத்துரை போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட 3 பேரையும் போலீஸ் வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அனுமதியின்றி பொது இடத்தில் தர்ணாவில் ஈடுபட கூடாது என 3 பேரையும் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஊர் நிர்வாகிகள் புகார் தெரிவித்ததால் மார்க் யாகப்பனை விசாரணைக்கு அழைத்து சென்றோம். அப்போது அவர் போலீசாரிடம் இருந்து தப்பியோடி விட்டார். அவரை தேடி வருகிறோம்’ என்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்