இயற்கையை பாதுகாப்பதில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

இயற்கையை பாதுகாப்பதில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2019-08-12 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் அதன் குடியிருப்பு வளாக அரங்கில் பள்ளி மாணவ, மாணவிகளின் மொழிப்புலமை மற்றும் அறிவுக்கூர்மையை மேம்படுத்தும் வகையிலான திறன்வெளிப்பாடு போட்டிகள் “இயற்கையை வளர்ப்போம் எதிர்காலத்தை வளமாக்குவோம் என்பதை முன்னிலைப்படுத்தி நடந்தது. இதில் கரூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோயமுத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களிலிருந்து அரசுப் பள்ளிகள் உள்பட 64 பள்ளிகளிலிருந்து 1,316 மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சுப்போட்டி, தமிழ் இலக்கியம் தொடர்பாக வினாடி வினா போட்டி, தமிழ் குறுக்கெழுத்து போட்டி, ஆங்கிலத்தில் கதை சொல்லுதல், மொழிபெயர்த்தல், கதை எழுதுதல், அட்டை படம் வரைதல், குச்சி - நூல் கொண்டு கைவினை பொருட்கள் செய்தல், கிராமிய நடனப்போட்டி, வில்லுப்பாட்டு உள்பட 21 வகையான போட்டிகள் நடைபெற்றன.

பரிசளிப்பு விழா

இதில் அரசு பள்ளிகளில் கரூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், புகளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. துளசிகொடும்பு கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. இதைத்தவிர மேலும் சில பள்ளிகளும் முக்கிய இடங்களை பெற்றன. அதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சிவசண்முகராஜா தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு போட்டியில் சிறப்பிடம் பெற்ற பள்ளிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுக்கோப்பை, சான்றிதழை வழங்கி பேசுகையில், தற்போது நகரமயமாதல் என்பது பெருகி வருகிறது. வளர்ச்சியை நோக்கி பலபடிகளில் நாம் முன்னோக்கி சென்றாலும், இயற்கையை பாதுகாப்பதில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது என்பன உள்ளிட்டவற்றை தங்களது கடமையாக ஒவ்வொருவரும் நினைவில் வைத்து செயல்பட வேண்டும். மேலும் மாணவர்கள் சாலை விதிகளை மதித்து சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதில் முதன்மை பொது மேலாளர் (மனித வளம்) பட்டாபிராமன், முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி) தங்கராசு, செயல் இயக்குனர் (இயக்கம்) கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர் (வணிகம்-மின்சாரம் மற்றும் கருவியியல்) பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்