தியேட்டர்களில் வசூலித்த கூடுதல் கட்டணத்தை பொதுமக்களுக்கு திருப்பி தந்த அதிகாரிகள் - ராணிப்பேட்டையில் அதிரடி

ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தியேட்டர்களில் வசூலித்த கூடுதல் கட்டணத்தை பொதுமக்களுக்கு அதிகாரிகள் திருப்பி தந்தனர்.

Update: 2019-08-12 22:15 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை), 

தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் டிக்கெட் கட்டண வசூல் விவரத்தை தமிழக அரசு நிர்ணயித்து அறிவித்துள்ளது. அதன்படி, ஏ.சி. வசதி உள்ள மல்டிபிளக்ஸ் வசதியுடைய தியேட்டர்களில் 120 ரூபாயும், மாநகராட்சி. நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் 100 ரூபாயும், ஊராட்சி பகுதிகளில் ரூ.75 மட்டுமே வரிகள் தவிர்த்து அதிகபட்சமாக டிக்கெட் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம் பகவத் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அரசு நிர்ணயித்த கட்டண தொகையைவிட 6 தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரியவந்தது.

இதனையடுத்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம் பகவத் பொதுமக்களிடம் இருந்து கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 6 தியேட்டர்களிலும் பொதுமக்களிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டண தொகை 34 ஆயிரத்து 400 ரூபாய் பொதுமக்களுக்கு திரும்ப வழங்கப்பட்டது.

ஆய்வின் போது தாசில்தார்கள் பூமா, வத்சலா, சதீஷ், ஜெயக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்