நத்தம் அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

நத்தம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-12 22:30 GMT
நத்தம், 

நத்தம் அருகே சாத்தம்பாடி ஊராட்சியில் உள்ளது விளாம்பட்டி கிராமம். இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் பழுதானது.

மேலும் மின்மோட்டாருக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் நத்தம்-மதுரை 4 வழிச்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ் பெக்டர் மாதவராஜா போலீசார் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பழுதான மின்மோட்டாரை சரிசெய்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்