போரூரில் திருடி, தாம்பரத்தில் விட்டு சென்ற மர்மநபர்கள்: ரூ.70 ஆயிரத்துடன் நின்ற இருசக்கர வாகனம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

போரூரில் திருடி, தாம்பரத்தில் விட்டு சென்ற மர்மநபர்கள், ரூ.70 ஆயிரத்துடன் நின்ற இருசக்கர வாகனம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு.

Update: 2019-08-12 23:04 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் முத்துரங்க முதலி தெருவில் சாவியுடன், இருசக்கர வாகனம் கேட்பாரற்று நின்றது. இது குறித்த தகவலின் பேரில் தாம்பரம் போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் இருக்கைக்கு அடியில் 500 ரூபாயில் ஒரு கட்டு, 200 ரூபாயில் ஒரு கட்டு என மொத்தம் ரூ.70 ஆயிரம் இருந்தது.

பணத்துடன், இருசக்கர வாகனத்தை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்ற போலீசார், அதன் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், அந்த இருசக்கர வாகனம் போரூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 47) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது.

சொந்தமாக நிறுவனம் நடத்தி வரும் தேவராஜ், தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக அங்குள்ள வங்கியில் பணத்தை எடுத்து, இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு, இருசக்கர வாகனத்தை அலுவலகம் முன்பு நிறுத்தி இருந்தார்.

அதை மர்மநபர்கள் திருடிச்சென்று, தாம்பரத்தில் விட்டு சென்று உள்ளனர். ஆனால் இருக்கைக்கு அடியில் ரூ.70 ஆயிரம் இருந்ததை மர்மநபர்கள் கவனிக்காததால் அது தப்பியது. இதற்கிடையில் இருசக்கர வாகனம் திருட்டு போனது தொடர்பாக தேவராஜ் அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து பணத்துடன் இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது குறித்து தேவராஜுக்கு தாம்பரம் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்படி நேற்று மாலை தாம்பரம் போலீஸ் நிலையம் வந்த தேவராஜிடம், ரூ.70 ஆயிரத்துடன் இருசக்கர வாகனத்தை போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்