பிரதமர் ரூ.5 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும்: தேவேகவுடா கோரிக்கை

கர்நாடகத்தில் மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.5 ஆயிரம் கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று தேவேகவுடா கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-08-12 23:49 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் நேற்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

வடகர்நாடக மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பெய்துள்ள வரலாறு காணாத மழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதுபோல பாதிப்புகள் கர்நாடகத்தில் ஏற்பட்டதில்லை. மாநிலத்தில் வரலாறு காணாத மழை மற்றும் சேதங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 பக்கங்களில் கடிதம் எழுதியுள்ளேன். கர்நாடகத்தில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுள்ளேன்.

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சரியான முறையில் ஆய்வு நடத்த சிறப்பு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். மழையின் கோரத் தாண்டவத்திற்கு இதுவரை 42 பேர் பலியாகி இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இன்னும் 50 பேர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை தேடும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மழை பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி இருக்கிறார். நிவாரண பணிகளை மேற்கொள்ள எனது சார்பில் முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் கொடுத்துள்ளேன். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் உடனடியாக கர்நாடகத்திற்கு வந்து மழை பாதித்த பகுதிகளை பார்வையிட வேண்டும். அப்போது தான் இங்குள்ள நிலவரம், மக்கள் சந்திக்கும் அவலத்தை அவரால் அறிந்து கொள்ள முடியும்.

மந்திரிகள் இல்லாவிட்டாலும், முதல்-மந்திரி எடியூரப்பா தனி ஆளாக மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். தனது சக்தியை மீறி உழைக்கிறார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஆனால் மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை எனில், எந்த பணிகளையும் மாநில அரசால் மேற்கொள்ள முடியாது. எனவே மத்திய அரசு சார்பில் உடனடியாக கர்நாடகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.5 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார். 

மேலும் செய்திகள்