உதவி கலெக்டர் அலுவலகம் முன் மீன்பிடி தொழிலாளர்கள் போராட்டம்

தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகம் முன் மீன்பிடி, சங்குகுளி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-13 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி முத்தரையர் காலனிக்கு வடக்கு பகுதியில், சங்குகுளி தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் பயன்படுத்தி வந்த 2 ஏக்கர் பொது இடம், தற்போது தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி, அதை மீண்டும் தங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி பொதுமக்கள், மீன்பிடி, சங்குகுளி தொழிலாளர்கள் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரேஸ்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள், சங்குகுளி, மீன்பிடி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் உதவி கலெக்டர் சிம்ரான்சித்ஜிங் கலோன், தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்