தேனி அரசு மருத்துவக்கல்லூரியில், 8-வது நாளாக வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில், 8-வது நாளாக வகுப்பை புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-14 23:00 GMT
ஆண்டிப்பட்டி,

மருத்துவத்துறையில் டாக்டர்கள் அல்லாதவர் களை பணியில் அமர்த்தும் மத்திய அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும், மருத்துவப் படிப்பில் நெக்ஸ்ட் தகுதித்தேர்வை கைவிட வேண்டும், தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி தேனி அரசு மருத்துவக்கல்லூரியில், 8-வது நாளாக மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நுழைவுவாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், போலி மருத்துவர்களால் ஏற்படும் உயிர்சேதம் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் கோஷங்களை எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றும் 100 பேரும் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டம் எதிரொலியாக, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் திரும்பி சென்றனர். மருத்துவமனையில் அவசர சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டது. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்