மீன்கள் மீதான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும்: ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

மீன்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய கோரி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-14 23:15 GMT
ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொழிலை நம்பி மட்டும் ராமேசுவரம், பாம்பன் உள்பட மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 3000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன. இந்த நிலையில் மீன்கள் மீது மத்திய அரசு விதித்து வரும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியால் மீனவர்கள் முழுமையாக பாதிக்கப் படுகின்றனர்.

எனவே சூடை, காரல் போன்ற மீன்கள் மீது மத்திய அரசு விதித்து வரும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் பஸ் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க பொருளாளர் சகாயம் தலைமை தாங்கினார். இதில் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசுராஜா, எமரிட், சந்தியாகு, ஆல்வின், கருவாடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தங்கராஜ், பிச்சை, தட்சிணா உள்பட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் விசைப்படகு மீனவர் சங்க பொருளாளர் சகாயம் கூறியதாவது:-

மீனவர்கள் பிடித்து வரும் சூடை, காரல் மீன்கள் வியாபாரிகள் மூலம் வாங்கப்பட்டு பேக்கிங் செய்து வாகனம் மூலம் தூத்துக்குடி மற்றும் கூடங்குளத்தில் உள்ள மீன் கம்பெனிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பும் மீன்களை எந்திரத்தில் போட்டு அரைத்து ஆயில் தனியாகவும், பவுடர் தனியாகவும் பிரித்தெடுக்கப்படுகிறது. இது வரையிலும் இந்த மீன்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஆயிலுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு வந்தது.

தற்போது மீனில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பவுடருக்கும் தனியாக 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் கம்பெனியினர் சூடை, காரல் மீன்களை வாங்குவதற்கு மறுத்து வருகின்றனர்.

முன்பு இந்த மீன்களை 1 கிலோ ரூ.12 வரையிலும் வியாபாரிகள் வாங்கி கம்பெனிகளுக்கு அனுப்பி வந்தனர். ஆனால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் இந்த மீன்களை வியாபாரிகள் வாங்க மறுப்பதுடன் மிக குறைந்த விலைக்கு 1 கிலோ ரூ.7-க்கு வாங்குகின்றனர். இதனால் இந்த மீன்களை பிடித்து வரும் மீனவர்களுக்கு ஒட்டு மொத்தமாக பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீன்பிடி தொழில் முழுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் பிடித்து வரும் சூடை, காரல் மீன்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக ரத்து செய்து மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்