சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு அஞ்சல்தலை, நாணய கண்காட்சி

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி அருங்காட்சியகத்தில் சிறப்பு அஞ்சல்தலை, நாணய கண்காட்சி நேற்று நடைபெற்றது.

Update: 2019-08-14 23:00 GMT
மலைக்கோட்டை,

நாட்டின் 73-வது சுதந்திர தினவிழா இன்று(வியாழக் கிழமை) நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கோட்டை பகுதியில் உள்ள திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி அஞ்சல்தலைகள், நாணயங்கள், பணத்தாள்கள் கண்காட்சி நேற்று நடைபெற்றது.

திருச்சி அரசு அருங்காட்சியக கூடுதல் (பொறுப்பு) காப்பாட்சியர் சிவகுமார் இந்த கண்காட்சியினை திறந்து வைத்தார். 1869-ம் ஆண்டு முதல் 1948-ம் ஆண்டு வரை மகாத்மாகாந்தியின் வாழ்க்கை வரலாற்றினை எடுத்துரைக்கும் வகையில் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலை, மினியேச்சர், புகைப்பட அஞ்சல் அட்டை உட்பட இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட காந்தியின் அஞ்சல் தலைகள், முதல் நாள் உறைகள், சிறப்பு உறைகள், காந்தியின் படம் பொறிக்கப்பட்ட நாணயங்கள், பணத்தாள்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

இதில் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், ரமேஷ், முகமது சுபேர் உள்பட பலர் கலந்து கொண்டு தனது சேகரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். வரலாற்று ஆசிரியர் சரஸ்வதி, தாமோதரன், மன்சூர், குமரன் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் மாநகரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்