பொன்னாகரத்தில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு

பொன்னாகரத்தில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Update: 2019-08-15 23:00 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு உத்தரவின்படி 33 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் பரவாய் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவை செயல்படுத்தப்பட்டு உள்ளன எனவும், பரவாய் ஊராட்சியில் அடிப்படை வசதியான சாக்கடை தூர்வாருதல், கொசு மருந்து அடித்தல், முறையான குடிநீர் வசதி ஆகியவை செய்து தர முன்வர வில்லை எனவும் குற்றம் சாட்டி கூட்டத்திற்கு வந்திருந்த பற்றாளரிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். கூட்டத்தில் முறையாக பதில் அளிக்காததால் கிராம மக்கள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்வதாக கூறி கலைந்து சென்றனர். ஒருபுறம் ஊராட்சி நிர்வாகம் கூட்டம் நடந்ததாக கூறி பொதுமக்களிடம் கையெழுத்தும், மறுபுறம் கூட்டம் நடைபெறவில்லை என இளைஞர்கள் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி பரபரப்பை ஏற்படுத்தினர்.

பேரளி

அதேபோல் பேரளி ஊராட்சியிலும் கூட்டம் நடந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பற்றாளராக வந்திருந்த ராஜலிங்கத்திடம் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கிணறு வெட்டுவதற்கு ஊராட்சி ஏன் முன்வரவில்லை என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூற அதிகாரிகள் இல்லை என்பதால் பொதுமக்கள் கூட்டத்தை விட்டு எழுந்து கலைந்து சென்றனர். கூட்டம் நடத்தும் போது பொதுமக்களாகிய எங்களது கேள்விகளுக்கு பதில் கூற அனைத்து அதிகாரிகளும் (அரசு ஆணைப்படி) வர வேண்டும், இதில் முறையான பதிலும் அளிக்க வேண்டும் என கூறி கலைந்து சென்றனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து கூட்டம் நடத்த முயன்ற போது பொதுமக்கள் கலந்து கொள்ள முன்வரவில்லை.

முற்றுகை

அதேபோல் பென்னகோணம், எழுமூர் ஊராட்சிகளில் குறித்த நேரத்தில் கூட்டம் நடத்த ஊராட்சி செயலாளர்கள் இல்லாததாலும், பொறுப்பு ஊராட்சி செயலாளர்கள் வருவதற்கு காலதாமதம் ஆனதாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறததால் மக்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டு கலைந்து சென்றனர். ஆடுதுறை ஊராட்சியில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறாததால் ஊராட்சி செயலாளரை பொதுமக்கள் சிறிது நேரம் முற்றுகையிட்டனர்.

சாலை மறியல்

சிறுமத்தூர் ஊராட்சி பொன்னாகரத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் பணியிடம் காலியாக உள்ளது. பொறுப்பு ஊராட்சி செயலாளர் சரி வர வருவது இல்லையாம். இந்நிலையில் ஊராட்சியில் ரூ.49 லட்சத்து 130 செலவு ஆகி உள்ளதாக கணக்கு வாசிக்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் இல்லாமல் எவ்வாறு இவ்வளவு செலவு செய்யப்பட்டது என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். பதில் கூற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து பொன்னகரம் பஸ் நிலையம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ், மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், செலவு கணக்கை தணிக்கை ஆய்வு செய்து விளக்கம் அளிப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு மீண்டும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, ஊராட்சி பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்