மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் மாயனூர் கதவணை வந்தடைந்தது

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் மாயனூர் கதவணை வந்தடைந்ததையடுத்து விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

Update: 2019-08-15 23:00 GMT
கிருஷ்ணராயபுரம்,

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்தது. இன்னும் சில நாட்களில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியதையடுத்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

மாயனூர் கதவணை வந்தடைந்தது

10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் நேற்று காலை 11 மணிக்கு கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வந்தடைந்தது. இதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் மலர்தூவி காவிரி தண்ணீரை வரவேற்றனர். நேற்று நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த தண்ணீர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருச்சி மாவட்டம் கொள்ளிடம் முக்கொம்புவுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்