சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 4-வது நாளாக போராட்டம்
போராட்டத்தில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.;
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, ஆசிரியர்கள் தங்கள் நெற்றியில் ‘181' என எழுதியும், வில்லுபாட்டு பாடியபடியும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இதனைதொடர்ந்து, பகுதிநேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சைதாப்பேட்டை, எழும்பூர் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு 4-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதைபோல சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சென்னையில் 17-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பணிக்கு செல்லாமல் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.