கூடங்குளத்தில் சுதந்திர தின விழா: அணுமின் நிலையங்கள் மூலம் 9,600 மெகாவாட் மின்உற்பத்தி - இந்திய அணுமின் கழக இயக்குனர் சின்ஹா ராய் பேச்சு

வருகிற 2026-27-ம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்கள் மூலம் 9,600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என்று இந்திய அணுமின் கழக இயக்குனர் சின்ஹா ராய் பேசினார்.

Update: 2019-08-15 21:45 GMT
வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் நேற்று சுதந்திர தின விழா நடைபெற்றது. கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சஞ்சய் குமார் தலைமை தாங்கினார். இந்திய அணுமின் கழக இயக்குனர் (தொழில்நுட்பம்) சின்ஹா ராய் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செட்டிகுளம் அணுவிஜய் நகரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய அணுமின் கழக இயக்குனர் சின்ஹா ராய் தேசிய கொடி ஏற்றி மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

இந்தியாவிலேயே அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் கூடியது கூடங்குளம் அணு உலையாகும். தற்போது இந்தியாவில் குஜராத் மாநிலம் காக்ரபாரில் 2 அணு உலைகளும், ராஜஸ்தான் மாநிலம் ராவத் பாட்டாவில் 2 அணு உலைகளும், அரியானா மாநிலம் கோரக்பூரில் 2 அணுஉலைகளும் ஆக மொத்தம் 6 புதிய அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 2 அணு உலைகளின் கட்டுமான பணிகள் முடியும் நிலையில் உள்ளன.

இந்த அணு உலைகள் தலா 700 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்டவை ஆகும். இந்த அணு உலைகள் முழுக்க, முழுக்க இந்திய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் மேலும் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 புதிய அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது நாட்டில் அணு உலைகள் மூலம் 6,780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வருகிற 2026-27-ம் ஆண்டுக்குள் அணு மின்நிலையங்கள் மூலம் 9,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஞ்ஞானி இவானி சவ், நிலைய இயக்குனர் சுரேஷ் பாபு, திட்ட இயக்குனர் ஜெயகிருஷ்ணன், தலைமை கண்காணிப்பாளர் பி.ஏ.சுரேஷ், 5, 6-வது அணு உலைக்கான தலைமை கட்டுமான பொறியாளர் சுரேஷ், மத்திய தொழிலக பாதுகாப்பு படை கமாண்டர் டஸ்ஸர் ஷாகரே மற்றும் இந்திய, ரஷிய விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்