அனைத்து வீடுகளிலும் நீர் உறிஞ்சும் தொட்டிகள் அமைத்திட வேண்டும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

அனைத்து வீடுகளிலும் நீர் உறிஞ்சும் தொட்டிகள் அமைத்திட வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் வலியுறுத்தினார்.

Update: 2019-08-15 22:30 GMT
நாமக்கல்,

சுதந்திர தின விழாவையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் நேற்று கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. புதுச்சத்திரம் ஒன்றியம் கல்யாணி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் கலந்து கொண்டார்.

இதில் பொதுநிதி செலவினம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

தனிநபர் கழிப்பிடம்

கிராமசபை கூட்டத்தின் மூலம் பொதுமக்கள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திட தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு, முக்கியமான கருத்துகளையும் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு இல்லத்திலும் தனிநபர் கழிப்பிடம் கட்டி அதனை முழுமையாக பயன்படுத்திட வேண்டும்.

சுகாதாரத்தை பாதுகாப்பதனால் பல்வேறு நோய்கள் வராமல் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பை சேகரிப்பவர்களிடம் வழங்கிட வேண்டும்.

நீர் உறிஞ்சும் தொட்டிகள்

பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும். தண்ணீரை பயன்படுத்தும் அளவிற்கு அதை சேமிப்பது இல்லை. நீரை சேமித்தால் தான் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வரும். நாம் எந்த அளவிற்கு நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சுகின்றோமோ அந்த அளவிற்கு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்துகின்ற நீர், கழிவுநீர் வீணாகாமல் அவற்றை மீண்டும் நிலத்திற்குள் செலுத்தும் விதமாக அனைத்து வீடுகளிலும் நீர் உறிஞ்சும் தொட்டிகள் அமைத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, இணை பதிவாளர் (கூட்டுறவு) பாலமுருகன், இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மணிவண்ணன், துணை கலெக்டர் (பயிற்சி) பிரேமலதா, நாமக்கல் தாசில்தார் பச்சைமுத்து உள்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சமபந்தி விருந்து

இதேபோல் சுதந்திர தினத்தையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதிலும் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

மேலும் செய்திகள்