மேல்மலையனூர் அருகே, தறிகெட்டு ஓடிய கார் கிணற்றில் பாய்ந்தது; வாலிபர் பலி

மேல்மலையனூர்அருகே தறிகெட்டு ஓடிய கார் கிணற்றில் பாய்ந்த விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2019-08-15 23:15 GMT
மேல்மலையனூர்,

வேலூர் மாவட்டம் கனக சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 60), விவசாயி. இவரது மகன் மோகன்(26). நேற்று முன்தினம் காலை ராமன், தனது மகன் மோகன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(38), ஆறுமுகம்(36), முத்துக்குமார்(23) ஆகியோருடன் ஒரு காரில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு வந்தார். காரை எஸ்.என்.பாளையம் புதூரை சேர்ந்த ரங்க நாதன் மகன் முத்துக்குமார் என்பவர் ஓட்டினார். பின்னர் அன்று இரவு மீண்டும் அதே காரில் அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.

மேல்மலையனூர் அருகே வணக்கம்பாடி கிராமத்தின் அருகில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த கிணற்றில் பாய்ந்தது. இதில் தண்ணீரில் கார் மூழ்கியது. உடனே ராமன், வெங்கடேசன், ஆறுமுகம், முத்துக்குமார் மற்றும் டிரைவர் முத்துக்குமார் ஆகியோர் கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்து நீந்தி உயிர் தப்பினர். ஆனால் மோகன் மட்டும் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் உள்ளிட்டோர் கிணற்றில் இறங்கி மோகனை மீட்க முயன்றனர். ஆனால் அவர் காருக்குள் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மோகன் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்