உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் - 841 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 841 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2019-08-15 23:00 GMT
உடுமலை,

உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய கோட்டை ஊராட்சியின் கிராமசபை கூட்டம் நேற்று காந்திநகர் 2-வது காலனியில் உள்ள மங்கள விநாயகர் கோவில் வளாகத்தில் நடந்தது.

ஊராட்சி செயலாளர் என்.கந்தவடிவேல் வரவேற்று பேசினார். உடுமலை ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் பி.கந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பி.பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் பி.சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் வரதராஜன், முத்துக்குமார், விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்த ஊராட்சி பகுதியில் உள்ள ஆவல் குட்டையை தூர்வாருவது, பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு, பசுமை வீடுகள் மற்றும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்ட பயனாளிகளைத்தேர்வு செய்வது, ஜல் சக்தி அபியான் திட்டத்தின்படி மழைநீர் சேகரிப்பு பணிகளை மேற்கொள்வது, சுகாதாரம், சீரான குடிநீர், சாலை வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உடுமலை அருகில் உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியின் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கோகிலா வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சங்கரலிங்கம், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் அய்யாவு, முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குமாரசாமி லே-அவுட், சவ்பர்ணிகா லே- அவுட், ரங்கநாதர் லே-அவுட் ஆகிய பகுதிகளில் தார்சாலை வசதிகளை செய்துதரவேண்டும், ஊராட்சி பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் கொண்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போடிபட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் வி.செண்பகவள்ளி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பி.கணேஷ்பூபதி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு, தனிநபர் சுகாதார வளாகம் கட்டுதல், பொது சுகாதாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடுமலை ஒன்றியத்தில் இந்த ஊராட்சிகள் உள்பட மொத்தம் 38 ஊராட்சிகள் உள்ளன.

இந்த 38 ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 829 ஆண்களும், 4 ஆயிரத்து 63 பெண்களும் என மொத்தம் 6 ஆயிரத்து 892 பேர் கலந்துகொண்டனர். மொத்தம் 841 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களை உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகவதி (ரெகுலர்), சுப்பிரமணியம் (கிராம ஊராட்சிகள்) ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்