வெள்ளம் சூழ்ந்த மேம்பாலத்தில் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு

தொடர் கனமழை மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வடகர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

Update: 2019-08-16 00:12 GMT
பெங்களூரு,

தொடர் கனமழை மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வடகர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதில் ராய்ச்சூர் மாவட்டமும் ஒன்று. இந்த நிலையில் ராய்ச்சூர் மாவட்டம் ஹிரேராயனகுப்பியில் உள்ள மேம்பாலத்தை மூழ்கடித்தபடி கிருஷ்ணா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், 6 சிறுவர்களையும், பெண்ணின் உடலையும் சுமந்தபடி அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்சை ஓட்டிய டிரைவர் வெள்ளம் சூழ்ந்த மேம்பாலத்தை கடக்க அச்சப்பட்டார். இதனால் அவர் அருகே நின்ற 6-ம் வகுப்பு மாணவன் வெங்கடேசிடம்(வயது 12) உதவி கேட்டார். இதையடுத்து வெள்ளம் சூழ்ந்த மேம்பாலத்தில் வெங்கடேஷ் செல்ல அவனை பின் தொடர்ந்து டிரைவர் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. உயிரை பணயம் வைத்து ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய வெங்கடேசின் செயலை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.

இதை பார்த்தவுடன் தொழிலாளர் நலத்துறை செயலாளர் மணிவண்ணன், வெங்கடேசின் வீரச்செயலை பாராட்டும்படியும், அவனுக்கு விருது வழங்கும்படியும் கூறினார். அதன்படி நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் ராய்ச்சூர் மாவட்ட கலெக்டர், மாணவன் வெங்கடேசுக்கு பாராட்டு தெரிவித்து, சான்றிதழ் வழங்கினார்.

மேலும் செய்திகள்