விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பழமையான பாலங்களில் ஆடிப்பாட வேண்டாம்-மண்டல்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

விநாயகர் சிலைகளை கொண்டு செல்லும் போது பழமையான பாலங்களில் ஆடிப்பாட வேண்டாம் என மண்டல்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

Update: 2019-08-16 00:35 GMT
மும்பை,

மும்பையில் விநாயகர் சதுர்த்தி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். பல்வேறு இடங்களில் மண்டல்கள் சார்பில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடல்களில் கரைக்கப்படும்.

பொது மக்கள் இசைவாத்தியங்கள் முழங்க உற்சாகமாக ஆடிப்பாடி விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பார்கள். இந்தநிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பழமையான பாலங்களில் ஆடிப்பாடுவதை தவிர்க்குமாறு மும்பை மாநகராட்சி விநாயகர் மண்டல் நிர்வாகங்களை அறிவுறுத்தி உள்ளது.

மும்பை சி.எஸ்.எம்.டி. பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைமேம்பாலம் இடிந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மும்பை முழுவதும் உள்ள பாலங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன.

இதில் அபாயநிலையில் உள்ள பாலங்களில் பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடாமல் தடுக்க மாநகராட்சி இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்