இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க 25 சதவீத மானியத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க 25 சதவீத மானியத்தில் வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.;
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், தொழில் மைய அலுவலகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வங்கிக்கடனில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் 90 தொழில் முனைவோருக்கு ரூ.45 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே தேனி மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் திட்ட முதலீடு உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சமாகவும், சேவை தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.3 லட்சமாகவும், வியாபார தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்பு 2 விண்ணப்ப நகலுடன், பள்ளி அல்லது கல்லூரி மாற்றுச் சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல், திட்ட அறிக்கையின் அசல் மற்றும் நகல், ஜி.எஸ்.டி. எண் கொண்ட விலைப்பட்டியலின் அசல் மற்றும் நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் வருகிற 29-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு சமர்ப்பிப்பவர்களுக்கு நேர்காணல் 30-ந்தேதி நடக்கிறது. நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.