அருண்ஜெட்லி மறைவுக்கு நாராயணசாமி இரங்கல்

முன்னாள் மத்திய மந்திரி அருண்ஜெட்லி மறைவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-24 23:30 GMT
புதுச்சேரி,

முன்னாள் மத்திய மந்திரி அருண்ஜெட்லியின் மறைவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

அருண்ஜெட்லி சிறந்த பாராளுமன்றவாதி. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர். நான் மத்திய இணை மந்திரியாக இருந்தபோது அவர் மேல்சபையின் எதிர்க்கட்சி தலைவராக இருந்து பணியாற்றினார்.

அவரது திறமையான வாதத்தினால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்தார். பல மாநிலங்களுக்கு பாரதீய ஜனதா கட்சியின் பொறுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

2014 முதல் நிதி மந்திரியாக பணியாற்றினார். நான் முதல்-அமைச்சராக ஆனபின் அவரை பலமுறை சந்தித்து புதுவை மாநில வளர்ச்சிக்கு நிதி கேட்டுள்ளேன். அவரும் உதவி செய்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் தலைவராக அவர் இருந்தபோது நான் வைத்த கோரிக்கைகளை ஏற்று மாற்றங்களை கொண்டுவந்தார். பாரதீய ஜனதா கட்சி மிகப்பெரிய தலைவரை இழந்துள்ளது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

புதுவை முன்னாள் எம்.பி. கண்ணன் விடுத்துள்ள செய்தியில், ‘அருண்ஜெட்லி மறைவு செய்தி நாட்டுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியினருக்கும் மிகுந்த சோகத்தை உருவாக்கி உள்ளது. சிறந்த பாராளுமன்றவாதி, ராஜதந்திரி, அறிவார்ந்த வக்கீலுமான அவரது மறைவு அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு இந்த துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்