ஊரக தூய்மை கணக்கெடுப்பு மூலம் மாவட்டங்களை தரவரிசைப்படுத்தும் இயக்கம் தொடக்கம் அதிகாரி தகவல்

ஊரக தூய்மை கணக்கெடுப்பு மூலம் மாவட்டங்களை தரவரிசைப்படுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.

Update: 2019-08-24 22:45 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் நீர் மேலாண்மை (ஜல்சக்தி திட்டம்) திட்டத்தின் கீழ் நிலத்தடி நீரை மேம்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் மத்திய ஒருங்கிணைப்பு அலுவலரும், ஊரக வளர்ச்சித்துறை இணை செயலாளர் சஞ்சீவ்பட்ஜோஷி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய செயலி

நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் குடிநீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரித்தல், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை சீரமைத்தல், ஆற்றுப்படுகை வளர்ச்சி, தீவிர காடு வளர்ப்பு போன்ற தலைப்புகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு முறைகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் ஊரக தூய்மை கணக்கெடுப்பு மூலம் மாநிலம் மற்றும் மாவட்டங்களை தரவரிசைப்படுத்துதல் என்னும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்திடும் வகையில் பல்வேறு கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை இணையதின் மூலமாக பதிவு செய்திடும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வருகிற 29-ந் தேதி வரை பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை இணை செயலாளர் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தியாகராஜன், மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் குமரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாணி, விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்