ராக்கிங்கை தடுக்க கல்லூரிகளில் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு - கலெக்டர் உத்தரவு

கல்லூரிகளில் ராக்கிங் நடக்காமல் தடுக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

Update: 2019-08-25 22:30 GMT
சிவகங்கை,

மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ராக்கிங் தடுப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலும், போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- ராக்கிங்கால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல் கல்லூரிகளில் குழுக்கள் அமைத்து ராக்கிங் நடக்காமல் தடுத்து கண்காணிக்க வேண்டும். கல்லூரிகளில் ராக்கிங் நடப்பது குறித்து தெரியவந்தால் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் 18001805544 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலுள்ள 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம். அதன்மூலம் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், அலுவலர்கள் அப்துல்கபூர், கார்த்திகேயன், மனோகர், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சண்முகம், வட்டார போக்கு வரத்து அலுவலர் கல்யாண குமார் அரசு கல்லூரி மற்றும் தனியார்கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்