சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து: கரூர் எம்.பி. மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார்

சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கரூர் எம்.பி. மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார் கொடுத்தனர்.

Update: 2019-08-25 22:45 GMT
கரூர்,

பா.ஜ.க. இளைஞர் அணியின் திருச்சி கோட்ட இணை பொறுப்பாளர் கார்த்திகேயன், கரூர் மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கரூர் நகர தலைவர் செல்வன், நகர பொது செயலாளர் சரவண பாலாஜி உள்பட நிர்வாகிகள் திரண்டு வந்து நேற்று கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மீது ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் எம்.பி. ஜோதிமணி அதிகாரப்பூர்வமான தனது டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங் களில் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்பு மற்றும் பா.ஜ.க. மீது அவதூறு பரப்பும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், என்று கூறியிருந்தனர்.

அவதூறு கருத்துகள்

மேலும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட கருத்துகளை செல்போனில் புகைப்படமாக எடுத்து வந்து காண்பித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார், புகாரை பதிவு செய்து மனு ரசீதினை பா.ஜ.க.வினரிடம் வழங்கினார். மேலும் இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக கரூர் பா.ஜ.க.வினர் நிருபர்களிடம் கூறுகையில், சமீபத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் புதுடெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் “தெய்வம் நின்று கொல்லும். ஈழத்தமிழர் கதறிய போது இங்கே அதிகார போதையில் அகங்காரமாய் சுற்றிய அத்தனை பேரையும் தெய்வம் நிச்சயம் நின்று கொல்லும்” என்று ஒருவர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டார். இது தொடர்பாக ஜோதிமணி எம்.பி.யின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இருந்து “போடா முட்டாள்” என்று பதில் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த கருத்து மோதலில் தான் அவர் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்பு, பா.ஜ.க. மீது அவதூறு கருத்துக்களை பரப்பினார், என்றனர்.

மேலும் செய்திகள்