கள்ளக்காதல் தகராறில் பயங்கரம்: தலையில் கல்லை போட்டு தச்சுத்தொழிலாளி கொலை
ஆண்டிப்பட்டி அருகே கள்ளக்காதல் தகராறில் தலையில் கல்லை போட்டு தச்சுத்தொழிலாளியை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
கண்டமனூர்,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் நேற்று முன்தினம் இரவு தலை சிதைந்த நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ராஜதானி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்தவர் இடத்தின் அருகில் ரத்தக்கறையுடன் ஒரு கல்லும் கிடந்தது. இதனால் அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் ஜக்கம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தச்சுத்தொழிலாளி பாண்டியன் (வயது 45) என்பது தெரியவந்தது.
இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் மோப்ப நாய் ‘லக்கி‘ வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி 3 கி.மீ. ஓடி ஆசாரிபட்டி பாதையில் சென்று நின்றது. ஆனால் அது யாரையும் கவ்விபிடிக்கவில்லை.
இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். இதற்கிடையில் பாண்டியனும், ஆசாரிபட்டியை சேர்ந்த சென்றாயப்பெருமாளும் (45) ஒன்றாக மது அருந்தியது தெரியவந்தது. இதையடுத்து சென்றாயப்பெருமாளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாண்டியனை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
பாண்டியனின் மனைவி முத்தம்மாளுக்கும், கைது செய்யப்பட்ட சென்றாயப்பெருமாளுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனையறிந்த பாண்டியன் தனது மனைவி முத்தம்மாளை கண்டித்துள்ளார். இதனால் சென்றாயப்பெருமாளுடனான பழக்கத்தை கடந்த ஒரு ஆண்டாக முத்தம்மாள் துண்டித்துள்ளார்.
எனவே விரக்தியடைந்த சென்றாயப்பெருமாள், முத்தம்மாளை சந்தித்து மீண்டும் தன்னோடு பழக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் முத்தம்மாள் சம்மதிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த சென்றாயப்பெருமாள் தன்னுடன் பழக மறுத்தால் உன்னுடைய கணவனை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாண்டியன் பிச்சம்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி கொண்டு கடைக்கு பின்னால் அமர்ந்து அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த சென்றாயப்பெருமாளும் மது வாங்கி குடித்துள்ளார். இருவரும் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தபோது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சென்றாயப்பெருமாள், பாண்டியனை தாக்கி கீழே தள்ளியுள்ளார். பின்னர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்றாயப்பெருமாளை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் தகராறில் தலையில் கல்லைப்போட்டு தச்சுத்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.