சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரளா மறுப்பு

‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு மறுத்து வருகிறது‘ என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

Update: 2019-08-29 23:00 GMT
தேனி,

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தண்ணீரை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது அணையில் 6.2 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் பருவமழை நன்றாக பெய்ததால் 11.2 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. பருவமழை காலதாமதமாக பெய்ததால், அதில் பாதியளவு தண்ணீர் தான் இந்த ஆண்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, 142 அடியாக தண்ணீர் தேக்கும் அளவுக்கு கூட தண்ணீர் வரத்து இல்லை.

தற்போது அணையில் இருந்து தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 100 கன அடி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல்போக நெல் சாகுபடி பணிக்காக வினாடிக்கு 200 கன அடி மற்றும் மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதிக்கான பாசனம் மற்றும் மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 960 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மதுரைக்கு திறக்கப்படும் தண்ணீர் வைகை அணையில் சேமிக்கப்பட்டு இங்கிருந்து திறக்கப்படுகிறது.

பராமரிப்பு பணிக்காக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டது. பின்னர், நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி 2006-ல் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும் தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார்.

நம்முடைய சகோதர மாநிலமாக உள்ள கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அத்துடன் கேரள அரசு சட்டத் திருத்தமும் கொண்டு வந்தது. இந்த வழக்கில் 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை காலதாமதம் ஏற்பட்டது. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சரான பின்னர் மீண்டும் இந்த வழக்கின் வேகத்தை துரிதப்படுத்தி, 2006-ம் ஆண்டு பெறப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீண்டும் 2014-ல் உறுதி செய்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு பெறப்பட்டது.

அதன்படி ஜெயலலிதா காலத்திலேயே 142 அடி வரை 2 முறை தண்ணீர் தேக்கப்பட்டு உள்ளது. 152 அடியாக உயர்த்த பேபி அணை, மண் அணையை பழுது நீக்கம் செய்ய வேண்டும். 136 அடியாக நீர்மட்டம் குறைக்கப்பட்ட காலத்தில் மண் அணையில் மரங்கள் வளர்ந்துள்ளன. 156 பெரிய மரங்கள் அங்கு வளர்ந்துள்ளன. அதை அகற்றுவதற்கு அனுமதி கேட்டுள்ளோம். ஆனால், கேரள வனத்துறை இன்னும் அனுமதி கொடுக்கவில்லை.

அணையை பலப்படுத்த வல்லக்கடவு வழியாக கம்பிகள், கற்கள் போன்றவை கொண்டு சேர்த்துள்ளோம். பலப்படுத்தும் பணியில் சில பிரச்சினைகள் இருப்பதால், இதற்கு என்று அமைக்கப்பட்ட ஆணையம் மூலமாக கருத்து கேட்டு, அனுமதி கிடைத்தவுடன் 152 அடியாக உயர்த்தப்படும். அணைக்கு மின்சாரம் கொண்டு செல்லும் வழித்தடத்தில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக கேரள அரசு சொன்னதன் காரணமாக பூமியில் மின்கம்பிகளை புதைத்து எடுத்து செல்வதற்கு தமிழக அரசு அனுமதி கேட்டுள்ளது. இன்னும் கேரள அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வாகன நிறுத்தம், புதிய படகுக்கு அனுமதி கிடைக்காதது உள்ளிட்ட அணை பிரச்சினைகள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதை பெரிதுப்படுத்த வேண்டாம்.

அரசாணையின் படி தான் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி வனத்துறைக்கு உட்பட்டதாக உள்ளது. இதனால், தண்ணீர் வரும் பாதையில் மரங்கள் அடிக்கடி விழுந்து மதகு பகுதியை அடைத்துக் கொள்கிறது. இவை அவ்வப்போது பொதுப்பணித்துறை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திருடப்படும் சூழல் தேனி மாவட்டத்தில் இல்லை. வைகை அணையை தூர்வாருவது குறித்து திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்