பால்வளத்தை பெருக்க விவசாயிகளுக்கு 14 டன் தாதுஉப்பு கலவை வினியோகம் - கலெக்டர் தகவல்

பால்வளத்தை பெருக்கும் வகையில் விவசாயிகளுக்கு 14 டன் தாதுஉப்பு கலவை வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

Update: 2019-08-31 22:45 GMT
தேனி,

ஆண்டிப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருந்தகம் அமைந்துள்ளது. இங்கு செயற்கை கருவூட்டல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த செயற்கை கருவூட்டல் செயல்பாடுகளை, கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விலையில்லா வெள்ளாடுகள், கறவை பசு மாடுகள் வழங்கும் திட்டம், செயற்கை முறை கருவூட்டல் திட்டம், மாநில தீவன அபிவிருத்தி திட்டம், தேசிய மாநில சேவை திட்டம், கூடுதல் தீவன அபிவிருத்தி திட்டம், தாது உப்புக்கலவை வினியோகம், பசுசஞ்சீவினி திட்டம், கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வை தொடர்ந்து கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-

கால்நடைகளை பாதுகாத்திடும் பொருட்டு, கால்நடைகளின் உற்பத்தியை செயற்கை முறையில் பெருக்குவதற்கு ஊட்டி, ஓசூர் மற்றும் ஈச்சங்கோட்டை ஆகிய கால்நடை பண்ணைகளில் இருந்து உயர்தர உறைவிந்து குச்சிகள் மற்றும் பெருந்துறையில் செயல்பட்டு வரும் நிறுவனத்திடம் இருந்து திரவ நைட்ரஜன் ஆகியவை பெறப்பட்டு, 45 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்கள் மற்றும் தனியார் செயற்கை முறை கருவூட்டாளர்களுக்கு வழங்கி செயற்கை முறை கருவூட்டல் பணி சிறந்த முறையில் நடந்து வருகிறது.

மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இலவசமாக தீவன விதைகள், மரக்கன்றுகள் மற்றும் 75 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள், நீர்மத் தாவர வளர்ப்பு திட்ட அலகுகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாது உப்புக்கலவை வினியோகம் திட்டத்தின் கீழ் கால்நடைகளின் பால் வளத்தினை பெருக்குவதற்கு தாது உப்புக்கலவை 14 டன் பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பசுசஞ்சீவினி திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான 34 ஆயிரத்து 800 தாது வில்லைகள் மற்றும் 30 ஆயிரத்து 300 அடையாள அட்டைகள் நடப்பாண்டிற்கு பெறப்பட்டன. இதில், 32 ஆயிரத்து 120 தாது வில்லைகள், 30 ஆயிரத்து 260 அடையாள அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திலகவதி, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் அறிவழகன் மற்றும் கால்நடை டாக்டர்கள் உடன்இருந்தனர்.

மேலும் செய்திகள்