தேனி அல்லிநகரத்தில் துணிகரம்: கப்பல் ஊழியர் வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு

தேனி அல்லிநகரத்தில் கப்பல் ஊழியர் வீட்டில் 37 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2019-09-02 04:00 IST
தேனி, 

தேனி அல்லிநகரம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). இவர், மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் வேலை பார்த்து வருகிறார். தற்போது 2 மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இவர், வீட்டை பூட்டி விட்டு கண்டமனூரில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்று விட்டார்.

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த நகைகளை திருடி சென்றனர். தோட்டத்துக்கு சென்று விட்டு மாலையில் கண்ணன் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது துணிகள் சிதறி கிடந்தன.

மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 37 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கைகெடிகாரம் உள்ளிட்டவை கொள்ளை போயிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேனி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கப்பல் ஊழியர் வீட்டில் 37 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்