பனைக்குளம் அருகே பலசரக்கு கடை அலமாரி விழுந்து சிறுவன் சாவு; பாட்டி வீட்டுக்கு சென்றிருந்த போது பரிதாபம்

தன்னுடைய பாட்டி வீட்டுக்கு சென்றிருந்த போது, பலசரக்கு கடையில் இருந்த அலமாரி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.;

Update:2019-09-03 04:45 IST
பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே உள்ள அம்மாரி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகன்கள். தேவி தன்னுடைய மகன்களுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். இவர்களது மூத்த மகன் தர்மபாலா(வயது 9). இவன் தேவிபட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை நாட்களில் அவன் பனைக்குளம் ஊராட்சி தாமரையூரணி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வது வழக்கம்.

கடந்த சில நாட்களாக பள்ளிக்கு விடுமுறை என்பதால் சிறுவன் தர்மபாலா பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளான். நேற்று முன்தினம் மாலை தின்பண்டம் வாங்குவதற்காக தாமரையூரணியில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்றுள்ளான். அப்போது கடையின் உரிமையாளர் அருகில் உள்ள வீட்டுக்கு சென்றிருந்தாராம். இதனால் சிறுவன் கடையில் காத்திருந்தான்.

இந்த நிலையில் திடீரென கடையில் இருந்த அலமாரி சாய்ந்து சிறுவன் மீது விழுந்தது. இதில் அலமாரியின் அடியில் சிக்கிக் கொண்டான். அந்த நேரத்தில் அக்கம்பக்கம் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

பின்னர் கடையின் உரிமையாளர் வந்து பார்த்தபோது அலமாரி சாய்ந்து கிடப்பதையும், அடியில் சிறுவன் சிக்கி இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே தர்மபாலாவை மீட்டு அக்கம் பக்கத்தினரிடம் அவன் யார்? என்று விசாரித்தார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு உடனடியாக பனைக்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர், சிறுவன் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் கொண்டு செல்லும் வழியில் அவன் பரிதாபமாக இறந்து போனான்.

இந்த சம்பவம் தொடர்பாக தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்